பிழை திரை விமர்சனம்

பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம் பிழை. பெற்றோர் பேச்சை கேட்காதவர்கள் வாழ்க்கையில் உருப்பட மாட்டார்கள். அதுபோல், கல்வி கற்க வேண்டிய வயதில் அதை செய்யாமல் விட்டால், வாழ்க்கை என்னவாகும் என்பதையும் ஆணித்தரமாக சொன்ன இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளாக, காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நஷாத் மற்றும் கோகுல் நடித்துள்ளனர். மூன்று பெற்றோரும் தங்கள் மகன்களை படிக்க வைக்க கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் இவர்களின் பிள்ளைகளோ சுட்டித்தனம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். ஒரு நாள் விளையாட்டுத்தனமாக தங்களை விட நன்றாக படிக்கும் மாணவனை பாதாள கிணற்றில் தள்ளி விடுகின்றனர். அவன் உயிர் பிழைத்தாலும் அந்த பகுதியில் இது பிரச்சினையாக தந்தையர்கள் மூவரும் இவர்களை அடி உதை கொடுத்து பின்னி எடுக்கின்றனர்.

எனவே வீட்டை வீட்டு சென்னைக்கு ஓடி விடுகின்றனர். அங்கு செலவுக்கு பணமில்லாமல் அலையும் போது தெரியாமல் ஒரு தாதாவிடம் சிக்கி விடுகின்றனர். அவன் இவர்களை வைத்து மிரட்டி கொடுமைப்படுத்தி வேலை வாங்குகிறான். அவனிடமிருந்து சிறுவர்கள் தப்பினார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

ஊர் மக்களிடம் சிறுவர்கள் செய்யும் பிரச்னைகளை கூட ரசிக்க வைக்கிறது. ரமேஷ், நஷாத் இருவரும் பட்டைய கிளப்பியுள்ளனர். சென்னை ஓட்டலில் இவர்கள் படும் கஷ்டங்களை பார்த்தால் நமக்கே அனுதாபம் பற்றிக் கொள்கிறது. சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தைகளாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

கதையில் நகரம், கிராமம் என இரண்டு வித காதலை இயக்குனர் காட்டியுள்ளார். இதில் நகர காதலில், சாதியை சாடியிருப்பது கவனிக்கத்தக்கது. தேவையில்லாத இடைச்செருகலாகவும் இந்த காதல் காட்சிகள் அமைந்திருப்பது திருஷ்டி படிகாரம்.

இசை: பைசல்
ஒளிப்பதிவு: பாகி
பாடல்கள் : மோகன்ராஜ் & தாமோதரன்.
பாடியவர்கள் : வேல்முருகன், கேசவ், பிரியங்கா..

மொத்தத்தில் பிழை கொஞ்சமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *