வெற்றிக்கு இதெல்லாம் தேவை: ரஜினி

‛நாம் வாழ்வில் வெற்றியடைய நேரம், காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை முக்கியம்’ என ரஜினி கூறினார்.

தர்பார் பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதாவது:

அரசை பல நேரங்களில் நான் விமர்சித்திருந்தாலும், இசை வெளியிட்டு விழாவுக்கு இந்த அரங்கத்தை தந்தததற்கு நன்றி. சிறுவயதில், என் அண்ணன் என்னை படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால், பணக்கார நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என இருந்தேன். என் அண்ணன், 160 ரூபாய் கடன் வாங்கி தேர்வு கட்டணம் செலுத்தினார். அன்று நான் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி அடைய மாட்டேன் என்பதால், வீட்டிற்கு தெரியாமல் தமிழகத்திற்கு ரயிலில் புறப்பட்டு வந்தேன்.

சினிமாவில் என் மீது நம்பிக்கை வைத்து கலைஞானம் என்னை நாயகனாக்கினார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கையும் வீண் போகாது. 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற ‛பரட்டை’ பாத்திரம் தான் என்னை பட்டிதொட்டி எங்கும் விளம்பரப்படுத்தியது. ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்னை ஏளனமாக பேசியதால் நான் சபதம் எடுத்தேன். இதே கோடம்பாக்கத்தல் வெளிநாட்டு காரில் வலம் வர வேண்டும் என முடிவு எடுத்தேன்.

ஒன்றிரண்டு படங்களில் நடித்து முடித்ததும், இத்தாலிய காரை வாங்கி அதில் அயல்நாட்டு ஓட்டுனரை ஓட்ட வைத்து, கோடம்பாக்கம் சென்றேன். எந்த இடத்தில் தயாரிப்பாளர் என்னை அவமானப்படுத்தினாரோ அதே இடத்தில் சிகரெட் பற்ற வைத்தேன்.  அதன் பின் கே.பாலச்சந்தரிடம் சென்று காரை காட்டி ஆசிர்வதிக்க வேண்டினேன். ஆனால் அவர் மேலும், கீழும் பார்த்து விட்டு சென்று விட்டார்.

வீட்டுக்கு வந்து யோசித்த போது தான், எனக்கு கிடைத்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணமல்ல. என்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் உணர்ந்தேன். என் வெற்றிக்கு அனைவருக்கும் பங்குண்டு. நாம் வாழ்வில் வெற்றியடைய நேரம், காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை முக்கியம். அரசியல், ஊடகம், சமூகவலைதளம் என அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது. அனைவரிடமும் அன்பு செலுத்துவோம் சந்தோசமாக இருப்போம்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *