துப்பு கொடுத்தால் ஏழு லட்ச ரூபாய் பரிசு

‛‛சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குறித்து தகவல் கொடுத்தால் ஏழு லட்ச ரூபாய் வழங்கப்படும்,’’ என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வில்சன் படுகொலை சம்பவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் களியக்காவிளை காவல்நிலையத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்த தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் செயலி எண் 70103-63173 மற்றும் கட்டுப்பாட்டு அறை எண் 220167 செயல்பாட்டில் உள்ளதாக ஸ்ரீநாத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *