நடுநிலையான ஊடகங்கள் அவசியம்: ரஜினி

‛ஊடகங்கள், சேனல்கள் அந்தந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படும். நடுநிலையில் உள்ள பத்திரிகைகள், சுயநலமில்லாமல், பாகுபாடு பார்க்காமல், மக்களுக்கு எது நல்லதோ அதை வெளிப்படையாக உண்மையோடு சொல்ல வேண்டும்’ என ரஜினி பேசினார்.

சென்னையில் துக்ளக் வார இதழின், 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று ரஜினி பேசியதாவது:

வெங்கய்யா நாயுடு, துணை ஜனாதிபதியாக வந்தது அவ்வளவு சுலபமல்ல. நிறைய சிரமப்பட்டுள்ளார். படிக்கும் போதே யூனியன் செயலராக இருந்து, வளர்ந்து வரும் கட்சியில் சேர்ந்து, கட்சியையும் வளர்த்து, தானும் வளர்ந்து, அகில இந்திய அளவில் கட்சியின் தலைவராகி, மந்திரி பதவி வகித்து, மக்களுக்கு சேவை செய்து, அன்பையும் ஆதரவையும் பெற்று, கண்ணியமாக வாழ்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

எனக்கு ஒரு அதிருப்தி ரொம்ப சீக்கிரம் அவர் இந்த இடத்திற்கு வந்து விட்டார். நிறைய சேவை செய்து விட்டு இங்கு வந்திருக்கலாம். அவருக்கு இப்போது நிறைய கட்டுப்பாடு இருக்கு. அவர் இருக்கும் போது நமக்கும் கட்டுப்பாடு இருக்கு.

அவர் கட்டுப்பட்டு இருக்கும் போது, நான் என்ன பேசணுமோ அதை மட்டும் பேசுகிறேன்.

சோ கடைசி காலத்தில், நமக்கு பின் இந்த பத்திரிகையை யார் நடத்துவார் என கவலை அடைந்தார். இது குறித்து ஆலோசிக்கும் போது, அந்த இடத்திற்கு சரியானவர் குருமூர்த்தி மட்டுமே என்பதை முழுதாக நம்பினார். ஆனால் குருமூர்த்தி அப்போது அதை ஏற்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. எம்ஜிஆர் படங்களில் அவரை எடுத்து விட்டு, வேறு யாராவது நடித்தால் இரண்டு நாட்கள் கூட ஓடாது. அந்த மாதிரி சோ இல்லாமல், துக்ளக் பத்திரிகையை நடத்தினால் இரண்டு வாரம் போகாது. சோ வேறல்ல; துக்ளக் வேறல்ல என்பதை உணர்ந்தார். தற்போது குருமூர்த்தி துக்ளக் பத்திரிகையை எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு பாராட்டுகள்.

சோ ஒரு ஜுனியஸ். அவர் பிறக்கும் போதே ஜுனியஸாக பிறந்தவர். படித்ததாலோ அனுபவத்தாலோ அவர் ஜுனியஸாகவில்லை. அதுபோன்றவர்கள் தங்களை அடையாளப்படுத்த சில ஆண்டுகள் ஆகும். தொலைநோக்கு பார்வையுடன் யாரும் சிந்திக்காத, சொல்லாத காரியங்களை செய்து மக்களால் அடையாளம் காணப்பட்டவர் சோ.

சோ தன்னை மெருகேற்ற எடுத்தது பத்திரிகை துறை. அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். அதில் அவரது சிந்தனை, கட்டுரை, கேள்வி பதிலில் நையாண்டி தனம், விமர்சனம், ரகசியம் மட்டுமல்லாமல் தேசியம், தெய்வீகம் மக்களை ரசிக்க வைத்தார். சிந்திக்க வைத்தார். துக்ளக் இனத்தையே உருவாக்கினார்.

முரசொலி வைத்திருந்தால் தி.மு.க., காரன் என சொல்லலாம். ஆனால், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி எனலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளியா படித்தால் அறிவாளியா என தெரியவில்லை.

சிலர் எதிர்ப்பதாலேயே பெரிய ஆள் ஆவர். சில சந்தர்ப்பங்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு சிலர் பெரிய ஆள் ஆவர். சோவை பெரிய ஆள் ஆக்கியது இருவர். ஒருவர் பக்தவச்சலம், இன்னொருவர் கருணாநிதி.

பக்தவச்சலம் தலைமையிலான அரசு இருந்த போது, ‛சம்பவாமி யுகே யுகே’ என்ற நாடகத்தில், பக்தவச்சலத்தை கடுமையாக விமர்சித்தார். நாடகத்தை நடத்த அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றி பெற்றார் சோ. நாடக உலகில் பெரிய ஆள் ஆனார்.

1971ல் சேலத்தில் பெரியார் தலைமையில், ராமர், சீதை போல் சட்டை இல்லாமல், செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக போனார்கள். அப்போது எந்த பத்திரிகையும் அது குறித்து செய்தி போடவில்லை. ஆனால் சோ மட்டுமே அதை படமெடுத்து, அட்டை படத்திலேயே பிரசுரித்து கடுமையா விமர்சித்தார். இதனால் தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்டப்பெயர் வந்தது.

அப்பத்திரிகை யார் கையிலும் கிடைக்கக் கூடாத வகையில், அதை கைப்பற்றினார்கள். ஆனால் மீண்டும் அப்பிரசுரத்தை அச்சடித்து, வெளியிட்டார். அது பிளாக்கில் விற்பனையானது. 10 ரூபாய்க்கு விற்பனையாக வேண்டிய பத்திரிகை 60 ரூபாய்க்கு விற்பனையானது. கருணாநிதி அவர்கள், துக்ளக் பத்திரிகைக்கு பெரிய பிரசாரத்தை கொடுத்தார்.

இன்னொரு சம்பவத்தில், தமிழகத்திற்கு மட்டுமே தெரிந்த சோ, அகில இந்தியாவுக்கே தெரிய ஆரம்பித்தார். இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்த போது, அட்டை படத்தை கருப்பாக போட்டு, கருப்பு நாள் என கூறினார். எமர்ஜென்சிக்கு எதிராக பிரசாரம் செய்தார். வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்களுக்கு சோ தெரிய ஆரம்பித்தார்.

கவலைகள் அன்றாடம் வரும், அதை நிரந்தரமாக்குவதும், தற்காலிகமாக்குவதும் அவரவர் கையில் உள்ளது. நிரந்தரமாக்கி கொண்டால்  நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ அறிவாளி.

கவலைகள் அனைத்தையும் தற்காலிகமாக்கிய சோ அறிவாளி. சோ மாதிரி ஒரு பத்திரிகையாளர் இந்தியாவுக்கு இப்போது மிகவும் அவசியம். நாடு, சமுதாயம், அரசியல் ரொம்ப கெட்டு போய்விட்டது. குருமூர்த்தி போன்றவர்கள் தான் நாட்டை திருத்த முடியும். அவருக்கு பெரிய கடமை இருக்கு.

சில ஊடகங்கள், சேனல்கள் அந்தந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படும். நடுநிலையில் உள்ள பத்திரிகைகள், சேனல்கள் சுயநலமில்லாமல், பாகுபாடு பார்க்காமல், மக்களுக்கு எது நல்லதோ அதை வெளிப்படையாக உண்மையோடு சொல்ல வேண்டும். முக்கியமாக விமர்சகர்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

பாலில் தண்ணீர் கலந்து விட்டால், அந்த பால் உண்மையான பாலா, அதில் எவ்வளவு தண்ணீர், பால் உள்ளது என்பதை பத்திரிகையாளர் தான் பிரித்து சொல்ல வேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒரு பால் கடை இருந்தது. பத்து ரூபாய்க்கு கலப்படம் இல்லாமல் விற்றார்கள். நல்லவர்களை சிலர் வாழ விடமாட்டார்கள். அப்போது இன்னொருத்தர் வந்து தண்ணீ கலந்த பாலை எட்டு ரூபாய்க்கு விற்றார். மக்களும் விலை குறைவாக இருக்கிறதே என தரத்தை பார்க்காமல் வாங்கினர். ஒருத்தனை ஏமாற்றினால் அவனை ஏமாற்ற இன்னொருத்தன் வருவான். அடுத்தவன் ஆறு ரூபாய்க்கு விற்றான். பத்து ரூபாய்க்கு விற்றவன் நேர்மையானவனாகவே இருந்ததான். அவனுக்கான வாடிக்கையாளர்களுக்கு பாலை விற்றான்.

ஒரு நாள் பண்டிகை வந்தது, விலை குறைவான பாலில் செய்த உணவின் நிலை தெரிந்தது. 10 ரூபாய்க்கு செய்த உணவின் சுவை தெரிந்தது. மீண்டும் அனைவரும், 10 ரூபாய் கடைக்கே சென்றனர். எப்போதும் உண்மையையே எழுதுங்கள். இருப்பதை எழுதுங்கள். தயவு செய்து பொய்யை உண்மையாக்காதீர். பத்திரிகைகளுக்கு பொறுப்பு இருக்கு.

இவ்வாறு ரஜினி பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *